இனி Whatsapp-லும் பணம் அனுப்பலாம் – இந்திய அரசு அனுமதி
இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கும் நிறுவனமான National Payments Corporation of India (NPCI) நிறுவனம், வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வாட்ஸ்அப் செயலி வழியாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இந்த வாட்ஸ் அப் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆகும்.
வாட்ஸ்அப் செயலி வழியாக
இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் குறுஞ்செய்திகள், படங்கள், மீம்ஸ் மற்றும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்ள வாட்ஸ்அப்பைப் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் செயலியில் பணபரிவர்த்தனை மேற்கொள்ள இந்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது.
இதற்கு அனுமதி அளிக்கும் National Payments Corporation of India (NPCI) நிறுவனம் நவம்பர் 5-ம் தேதி அனுமதி அளித்துள்ளது. இதனால் UPI சேவை வழியாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் 2 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள்.
இந்த வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது, குறுஞ்செய்தி அனுப்புவது போல் எளிமையாக இருக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் செயலி வழியாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வாட்ஸ் அப் செயலியின் பண பரிவர்த்தனை 140 வங்கிகளின் இணைப்பை பெற்றுள்ளது. மேலும் தற்போது 10 தேசிய மொழிகளில் வாட்ஸ்அப் பண பரிவர்த்தனை சேவை கிடைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த வாட்ஸ் அப் செயலியில் பணப் பரிமாற்றத்தின் போது அதிக பாதுகாப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு வாடிக்கையாளர்கள் சமீபத்திய வாட்ஸ் அப் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து அப்டேட் செய்ய வேண்டும். இந்த புதிய வாட்ஸ்அப் செயலி, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக கிடைக்கிறது.
தற்போது வரை கூகுள்பே (Google Pay), பே டிம் (Pay TM), போன் பே (Phone Pe) போன்ற செயலிகளே அதிகமாக UPI பண பரிவர்த்தனை சேவையில் இருக்கிறது. இப்போது வாட்ஸ்அப் செயலியும் UPI பண பரிவர்த்தனை சேவையில் களமிறங்கியுள்ளது.