மோட்டார் பைக் என்ஜின்களின் மேற்பரப்பில் உள்ள fin வடிவமைப்பு எதற்கு தெரியுமா?

 

நாம் மோட்டார் பைக்கில் பயணிக்கும் தேவையான சக்தியை அதில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் தருகிறது. இந்த மோட்டார் பைக்கின் இன்ஜினின் மேற்பரப்பிலுள்ள நீட்டிக்கப்பட்ட தகடு போன்ற fin அமைப்பை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

இந்த fin அமைப்பு எதற்காக பயன்படுகிறது என்பதை பற்றிய விளக்கத்தை கீழே காணலாம்.

மோட்டார் பைக் இன்ஜின்கள்

தற்போது உள்ள பெரும்பாலான மோட்டார் பைக்குகளில் நான்கு நிலை (4 stroke engine) உடைய இன்ஜின்களே, வாகனம் இயங்க தேவையான சக்தியை அளிக்கிறது. பெட்ரோலை எரிபொருளாக கொண்டு இயங்கும் மோட்டார் பைக் இஞ்சின்கள், காற்று மற்றும் எரிபொருள் உள்ளிழுப்பு, அழுத்தம், வெடிப்பு மற்றும் காற்று வெளியேற்றம் என 4 நிலைகளின் உதவியுடன் சக்தியை உருவாக்குகிறது.

அதாவது முதல் நிலையில், என்ஜின் சிலிண்டரில் உள்ள பிஸ்டன் கீழ் நோக்கி சென்று, காற்று மற்றும் எரிபொருளை உள்ளே இழுக்கிறது. அடுத்த இரண்டாவது நிலையில் பிஸ்டன் மேல் நோக்கி சென்று, காற்று மற்றும் எரிபொருளை அழுத்துகிறது.

இதனால் மூன்றாவது நிலையில் spark plug உதவியுடன் வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பின் காரணமாக வேதி ஆற்றலானது, இயக்க ஆற்றலாகவும் மற்றும் வெப்ப ஆற்றலாகவும் மாற்றப்படுகிறது. இந்த இயக்க ஆற்றல், Connecting rod மற்றும் Crank shaft உதவியுடன் சுழற்சி இயக்கமாக மாற்றப்படுகிறது.

இந்த சுழற்சி இயக்கம், Flywheel, Clutch மற்றும் Gear box வழியாக சக்கரத்திற்கு கொடுக்கப்படுகிறது. இந்த சக்கரத்திற்கு கிடைக்கும் இயக்க ஆற்றல், வாகனம் பயணிக்க மிகவும் பயன்படுகிறது.

ஆனால் வெடிப்பின் போது இயக்க ஆற்றலுடன் கிடைக்கும் வெப்ப ஆற்றல் நமக்கு பயன்படுவது இல்லை. மேலும் தேவைப்படாத இந்த வெப்ப ஆற்றல், என்ஜினின் சிலிண்டர், பிஸ்டன், Connecting rod போன்ற பகுதிகளுக்கு பரவுகிறது.

ஆனால் வாகனம் தொடர்ந்து இயங்க, தொடர்ச்சியான வெடிப்பு தேவைப்படுகிறது. இங்கு என்ஜினில் உள்ள சிலிண்டர், பிஸ்டன், வால்வுகள், Connecting rod மற்றும் Crank shaft ஆகிய பாகங்கள் உலோகத்தால் ஆனவை.

இருந்தாலும், வெப்பம் அதிகமாக உயரும் போது, என்ஜினில் உள்ள சிலிண்டர், பிஸ்டன் மற்றும் வால்வுகளின் செயல்திறன் குறையும். இதனால் வாகனம் தொடர்ந்து இயங்குவதில் தொய்வு ஏற்படும். எனவே வாகனம் இயங்குவதில் தொய்வு ஏற்படாமல் இருக்க என்ஜின் சிலிண்டரில் உருவாகும் அதிக வெப்பத்தை வெளியேற்ற வேண்டும்.

Fin அமைப்புகள்

இயற்பியல் விதிப்படி வெப்ப ஆற்றலானது, அதிக வெப்பம் உள்ள பகுதியிலிருந்து, குறைவான வெப்பம் அல்லது குளிர்ச்சியான பகுதிக்கு பயணிக்கும்.

எனவே சிலிண்டரின் உள்பகுதியில் உருவாகும் அதிக வெப்பம், வெப்பம் குறைவாக உள்ள சிலிண்டரின் மேற்பரப்பிற்கு வருகிறது. இந்த எஞ்சின் மேற்பரப்பில் எஞ்சினியர்களால் வடிவமைக்கப்பட்ட fin அமைப்பில் வெப்பம் பரவ தொடங்குகிறது.

இங்கு நீட்டிக்கபட்ட fin அமைப்பில் உள்ள மேற்பரப்பு, காற்றின் உதவியுடன் பரவிய வெப்பத்தை குறைக்கிறது. இவ்வாறு fin அமைப்பில் வெப்பம் குறைக்கப்படுவதால், சிலிண்டரின் உள்பகுதியில் உள்ள அதிகப்படியான வெப்பம், மீண்டும் fin அமைப்பிற்கு வருகிறது.

மேலும் வாகனத்தின் இயக்கத்தின் காரணமாக ஏற்படும் காற்றின் வேகம், மீண்டும் fin அமைப்பில் வெப்பத்தை குறைக்கிறது. இவ்வாறு தொடர்ந்து காற்றின் உதவியுடன் fin அமைப்பில் உள்ள வெப்பம் குறைக்கப்படுவதால், சிலிண்டரின் உள்பகுதியில் உள்ள அதிக வெப்பம் தொடர்ந்து வெளியேறுகிறது.

இந்த வெப்பம் வெளியேற்றப்படும் நிகழ்வு, சிலிண்டர் மற்றும் பிஸ்டன் செயல்திறனில் தொய்வு ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இவ்வாறு வாகன என்ஜினின் மேற்பரப்பிலுள்ள fin அமைப்பு, என்ஜின் சிலிண்டரில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.

இது வாகன இன்ஜினின் செயல்திறனில் தொய்வு ஏற்படாமல், நாம் தொடர்ந்து பயணிக்க உதவுகிறது.

இந்த fin அமைப்புகள், கார்களின் ரேடியேட்டரிலும், கணினியின் CPU-விலும் மின் உற்பத்தி நிலையங்களில் வெப்பத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

இப்பொழுது எஞ்சின் மேற்பரப்பில் உள்ள Fin அமைப்புகள், எஞ்சின் சிலிண்டரின் உள்பகுதியில் உருவாகும் வெப்பத்தை குறைக்க உதவுகிறது என உங்களுக்கு புரிந்திருக்கும்.

மேலும் பிஸ்டன், Connecting rod மற்றும் Crank shaft பாகங்களில் பரவும் வெப்பத்தை தணிக்க, எஞ்சின் ஆயில் அமைப்பு தனியாக செயல்படுகிறது.