TVS NTORQ 125 ஸ்கூட்டரில் கேப்டன் அமெரிக்கா, பிளாக் பாந்தர், அயன் மேன் எடிசன் அறிமுகம்
இருசக்கர வாகனங்களில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தன்னுடைய TVS NTORQ 125 ஸ்கூட்டரில் மார்வெல் அவெஞ்சர்ஸ் ரசிகர்களை கவரும் விதமாக சூப்பர் ஸ்குவாட் எடிசனை இந்தியாவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஸ்கூட்டரில் கேப்டன் அமெரிக்கா, அயன் மேன், பிளாக் பாந்தர் பாடி கிராஃபிக்ஸை காம்பட் ப்ளு, இன்வின்சிபிள் ரெட் மற்றும் ஸ்டீல்த் பிளேக் என மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த புதிய சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஸ்கூட்டர், தற்போது விற்பனையில் உள்ள டாப் வேரின்ட் ரேஸ் எடிசனை விட கூடுதலாக 3,000 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அயன் மேன் எடிசன்
மிகவும் பிரபலமான அயன் மேன் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு, சிவப்பு மற்றும் தங்க நிற பாடி கிராஃபிக்ஸை இந்த NTORQ 125 ஸ்கூட்டரில் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். மேலும் அயன் மேன் ஹெல்மெட் மற்றும் ஆர்க் ரியாக்டரையும், அதனுடன் 63 என்ற எண்ணை பக்கவாட்டு பாடியில் வடிவமைத்திருக்கிறார்கள்.
இதில் 63 என்பது அயன் மேன் ஹீரோ முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட 1963 ஆம் வருடத்தை குறிக்கிறது.
கேப்டன் அமெரிக்கா எடிசன்
இந்த எடிசனில் கேப்டன் அமெரிக்கா ரசிகர்களை கவரும் விதமாக காம்பட் ப்ளு, சிவப்பு மற்றும் வெள்ளை நிற பாடி கிராஃபிக்ஸை கொடுத்திருக்கிறார்கள். மேலும் இதன் பாடியில் குறிப்பிடப்பட்டுள்ள 41 என்ற எண், மார்வெல் காமிக்ஸ் முதன்முதலில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய வருடத்தை குறிக்கிறது.
பிளாக் பாந்தர் எடிசன்
ஸ்டீல்த் பிளாக் மற்றும் பர்பிள் நிற அழகான பாடி கிராஃபிக்ஸில் பிளாக் பாந்தர் எடிசன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதனுடன் பிளாக் பாந்தர் முகத்திரை மற்றும் ‘Wakanda Forever’ முத்திரையையும் பக்கவாட்டு பாடியில் வடிவமைத்திருக்கிறார்கள்.
மேலும் பிளாக் பாந்தர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டான 1966-ஐ குறிக்கும் விதமாக 66 என்று எண்ணை ஸ்கூட்டரின் பாடியில் பொறித்திருக்கிறார்கள்.
ஸ்கூட்டர் வடிவமைப்பு
இந்த புதிய சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஸ்கூட்டரில் பாடி கிராஃபிக்ஸ் வடிவமைப்பை தவிர, இன்ஜின் பவர் மற்றும் மற்ற வசதிகளில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த புதிய NTorq ஸ்கூட்டரில் Fuel injection தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய காற்றினால் குளிர்விக்கப்ப்படும் 124.8cc எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.25 bhp பவரை 7,000 சுழற்சியிலும், 10.5 Nm டார்க்கை 5,500 சுழற்சியிலும் தருகிறது.
விலைப்பட்டியல்
NTorq 125 டிரம் – ரூ. 75,342
NTorq 125 டிஸ்க் – ரூ. 79,342
NTorq 125 ரேஸ் எடிசன் – ரூ.82,922
NTorq 125 சூப்பர் ஸ்குவாட் எடிசன் – ரூ. 85,922
மேலே குறிப்பிட்ட விலை சென்னை எக்-சோரூம் விலையாகும்.