வாகன இன்ஜின்களில் உள்ள வால்வுகளை அதிகப்படுத்தினால் நன்மையா?
நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்ல நமக்கு மோட்டார் பைக், கார்கள் மற்றும் பேருந்துகள் உதவுகிறது. இதில் மோட்டார் பைக், கார்கள் மற்றும் பேருந்துகளை இயக்க தேவையான சக்தியை அதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் தருகிறது.
இந்த எஞ்சின்கள், பெட்ரோல் அல்லது டீசலை எரி பொருளாகப் பயன்படுத்துகின்றன. மேலும் இந்த என்ஜின்களில் உள்ள இன்ஜின் வால்வுகளை அதிகப்படுத்தினால் நன்மை கிடைக்குமா என்பதைப் பற்றிய விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்ஜின் வால்வுகள்
வாகனங்களை இயக்க தேவையான சக்தியை அதில் உள்ள இன்ஜின் தருகிறது. இந்த சக்தியை உருவாக்க இன்ஜினில் உள்ள பல்வேறு பாகங்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்த இன்ஜினில் உள்ள முக்கியமான பாகங்களில், இன்ஜின் வால்வும் ஒன்று.
இந்த இன்ஜின் மற்றும் இன்ஜின் வால்வுகள் முதன் முதலில் நீராவி இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதன்பிறகு நீராவி எஞ்சினில் பயன்பட்டு வந்த Slide வால்வுக்கு பதிலாக புதிய Puppet வால்வுகள் வாகன எஞ்சின்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த Puppet வால்வுகள் Camshaft சுழற்சி உதவியுடன் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு இயங்கும் இன்ஜின் வால்வுகள், என்ஜினுக்கு மேலே அதாவது தலைப்பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும். பொதுவாக இன்ஜினில் இரண்டு வால்வுகள் இருக்கும். இதில் ஒன்று இன்ஜினுக்குள் எரிபொருளை தேவையான அளவு அனுமதிக்கவும், மற்றொன்று எரிவாயுவை வேகமாக வெளியேற்ற உதவுகிறது.
மேலும் இன்ஜினில் உள் நுழையும் வழி, வெளியில் செல்லும் வழியை அடைத்துக்கொண்டு பிஸ்டன் உதவியுடன் அழுத்தத்தை உருவாக்கி எரிபொருளை எரிக்க உதவுகிறது.
இதில் உள் நுழையும் வழியில் உள்ள வால்வு திறக்கப்பட்டு, வாயு மற்றும் எரிபொருளை இன்ஜினுக்குள் அனுமதிக்கும் போது, வெளி செல்லும் வழியில் உள்ள வால்வு அடைக்கப்பட்டிருக்கும்.
அடுத்ததாக எரிபொருள் எரிந்த பின்பு, வெளி செல்லும் வழியில் உள்ள வால்வு திறக்கப்பட்டு, வாயு வெளியேறும் போது, உள் நுழையும் வழியில் உள்ள வால்வு அடைபட்டிருக்கும்.
இவ்வாறு முக்கியமான செயலை செய்யும் இந்த வால்வுகள், சக்தியை உருவாக்க முக்கிய பங்காற்றுகிறது.
அதிகப்படியான வால்வுகளின் பயன்
வாகனங்கள் 3000 rpm வேகத்தில் இயங்கும் போது அதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் தோராயமாக ஒரு நொடிக்கு 12 முறை வெடிப்பை ஏற்படுத்தி சக்தியை உருவாக்க வேண்டும். இந்த சமயத்தில் இதில் பொருத்தப்பட்டுள்ள வால்வுகள் ஒரு நொடிக்கு 24 முறை இயங்க வேண்டும்.
இந்த குறைவான நேரத்தில் காற்று மற்றும் எரிபொருள் விரைவாகவும், முழுமையாகவும் திறந்த வால்வு வழியாக உள்ளே வர வேண்டும். மேலும் எரிந்த வாயு விரைவாகவும், முழுமையாகவும் வெளியேற வேண்டும்.
எனவே எஞ்சினில் உள்ள இரண்டு வால்வுகளுக்கு பதிலாக, நான்கு வால்வுகளை பொருத்தும் போது (அதாவது 2 உள் நுழையும் வழி வால்வுகள் மற்றும் 2 வெளியில் செல்லும் வழி வால்வுகள்), காற்று மற்றும் எரிபொருள் விரைவாகவும், முழுமையாகவும் அதிகப்படியாக உள்ளே வர 2 உள் நுழையும் வழி வால்வுகள் உதவுகின்றன.
மேலும் வெடிப்பு நிலைக்கு பின்பு எரிந்த வாயு எளிதாகவும், விரைவாகவும் வெளியேற மற்ற 2 வெளியில் செல்லும் வழி வால்வுகள் உதவுகின்றன.
இந்த அதிகப்படுத்த பட்ட வால்வுகளால், என்ஜினில் அதிக செயல்திறனும் மற்றும் கூடுதலான சக்தியும் கிடைக்கிறது. இவ்வாறு அதிக சக்தியை பெறுவதன் மூலம் வாகனத்தை வேகமாக இயக்கலாம்.
இந்த வகை தொழில்நுட்பம், ரேஸ் மோட்டார் பைக் மற்றும் கார்களில், அதிக செயல்திறன் மற்றும் சக்தியை பெற பயன்படுகிறது. ஆனால் நான்கு வால்வுகள் உடைய எஞ்சினை உருவாக்க தேவையான செலவு அதிகம்.
எனவே இது ரேஸ் பைக் மற்றும் கார் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான மோட்டார் பைக் மற்றும் கார்கள் போன்ற வாகனங்களில் செலவை குறைக்க இரண்டு வால்வு இன்ஜின்களே பொருத்தப்பட்டுள்ளது.
இறுதியாக அதிகப்படியான வால்வு உள்ள இன்ஜின், அதிக செயல்திறன் மற்றும் சக்தியை கொடுக்கும் என இந்த பதிவில் இருந்து உங்களுக்கு புரிந்திருக்கும்.