சீனாவில் புலியுடன் வாக்கிங் சென்ற நபர் – இது உண்மையா?
சீன நாட்டின் தெருவில் பாதசாரி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில் சாதாரணமாக ஒரு மனிதனுடன் புலி நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அருகில் சென்று பார்த்த பின்புதான் அது புலி அல்ல, வண்ண சாயம் பூசப்பட்ட நாய் என்று தெரிய வந்துள்ளது.
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்ட இந்த வீடியோ காட்சி, சீனாவின் கான்சு மாகாணத்தில் உள்ள ஜாங்கியே நகரத்தின் பாதசாரி ஒருவரால் படம் பிடிக்கப்பட்டது. உள்ளூர் ஊடகங்களின் விசாரணைக்கு பின்பு, வீடியோ காட்சியில் இருப்பது புலி போன்ற வர்ணம் பூசப்பட்ட வளர்ப்பு நாய் என்றும், அது காகசியன் இனத்தை சேர்ந்த நாய் என்றும் தெரிந்தது.
இந்த வளர்ப்பு நாயின் மேலே அதனுடைய எஜமானரால், ஆரஞ்சு நிற சாயத்துடன், கருப்பு நிற கோடுகளும் புலியைப் போல வரையப்பட்டிருந்தது. மேலும் உண்மையான புலியின் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நீண்ட வால் பகுதி நாயின் பின் புறத்தில் சேர்க்கப்பட்டு இருந்தது.
சில பத்திரிகைகளின் தகவல்படி, சீனாவில் எஜமானர்கள் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை காட்டு விலங்கு போல வேடமிடுவது இது முதல் முறையல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பெண் ஒருவர் தன்னுடைய சவ் சவ் இன நாயை வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணத்தை பூசி பாண்டா கரடி போல மாற்றி இருந்தார். மேலும் மற்றொரு எஜமானர் செங்டு வணிக வளாகத்தில் தன்னுடைய 6 சவ் சவ் இன நாய்களை தோற்றத்தில் பாண்டா கரடி போல மாற்றி இருந்தார்.
சமீபகாலமாக சீனாவில் செல்லப்பிராணிகளுக்கு வர்ணம் பூசி மற்ற விலங்குகளைப் போல தோற்றத்தை மாற்றும் கலாச்சாரம் பரவி வருகிறது.
இந்த நிகழ்விற்கு செல்லப்பிராணி உரிமையாளர்கள் தரம் நிறைந்த வண்ண சாயங்களை பூசாமல், விலை மலிவான தரம் குறைந்த நச்சுக்கள் நிறைந்த வண்ண சாயங்களை செல்லப் பிராணிகளின் மேல் பூசும் போது, சில சமயங்களில் தவறுதலாக செல்லப்பிராணிகள் தங்கள் நாக்கினால் உடலை நக்க நேரிடும்.
இதனால் நச்சு மிக்க சாயங்கள் உடலுக்குள் செல்லும்போது உடல் உபாதைகள் அல்லது சில நாட்களில் இறப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
எனவே இந்த செல்லப்பிராணிகளின் மேல் வர்ணம் பூசும் கலாச்சாரத்திற்கு சீனாவிலும் மற்றும் வெளி நாட்டிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.