வாகனங்களில் LED விளக்குகள் சிறப்பானதா ?
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உள்ள மின் விளக்குகள் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த மின் விளக்குகள் வாகன ஓட்டுநரின் தெளிவான பார்வைக்காகவும், மற்ற வாகனங்களுக்கு சிக்னலை தெரிவிக்கவும் பயன்படுகிறது.
இந்த மின் விளக்குகள் வாகனத்தின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.
கடந்த சில வருடங்களாக வாகனங்களில் Halogen மின் விளக்குகளே பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது வாகன தயாரிப்பாளர்கள், தங்களுடைய கார் மற்றும் பைக்குகளில் LED மின்விளக்கை அறிமுகப் படுத்தி வருகிறார்கள்.
இந்த LED மின் விளக்குகள் பயன் உள்ளதா ? மற்றும் அதன் சிறப்புகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
LED மின் விளக்குகள்
ஆரம்ப காலங்களில், வாகனங்களில் ஒளி அமைப்பிற்காக கெரோசின் மற்றும் எண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி வந்தனர். டைனமோ கண்டு பிடிக்கப்பட்ட பின்பு, மின்சாரத்தில் இயங்கும் மின்விளக்குகள் கார்களில் பொருத்தப்பட்டது.
1949 ஆம் ஆண்டு நடந்த ஜெனிவா மாநாட்டில், வாகனங்களின் முன்புறத்தில் வெள்ளை நிற அல்லது இள மஞ்சள் நிற ஒளி விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
காலம் செல்ல செல்ல வாகனங்களில் ஒளிரும் விளக்குகள், Halogen விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தது.
வாகனங்களில் உள்ள முன் ஒளி அமைப்பு, இரவு நேரங்களில் வாகனத்தில் பயணிக்கும்போது ஓட்டுநருக்கு சாலை தெளிவாக தெரியவும், மற்ற ஓட்டுநர்கள் வாகனத்தை தெளிவாக அடையாளம் காணவும் உதவுகிறது. மேலும் இந்த ஒளி அமைப்பு வாகனத்தின் வேகத்தையும், செல்லும் திசையையும் மற்ற ஓட்டுநருக்கு தெளிவாக காட்டுகிறது.
வாகனத்தில் உள்ள பின்புற விளக்குகள் பிரேக் சிக்னலையும், வாகன இருப்பையும் மற்ற ஓட்டுனருக்கு தெரிவிக்க உதவுகிறது. மேலும் வாகனத்தை பக்கவாட்டில் திருப்பும் போது மற்ற ஓட்டுனருக்கு சிக்னலை தர, பக்கவாட்டு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள் பயன்படுகிறது.
இந்த பயனுள்ள ஒளி அமைப்பு, மனித தவறினால் ஏற்படும் விபத்தை தடுக்கிறது.
இவ்வாறு வாகனங்களில் பயன்படுத்தப்படும் இந்த ஒளி அமைப்பில், தற்போது எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகபடுத்தப்படுகிறது. இந்த LED என்பது ஆங்கிலத்தில் Light Emitting Diodes என்பதை குறிப்பதாகும்.
இந்த புதிய LED மின் விளக்குகளின் சிறப்புகளை கீழே காணலாம்.
அதிக ஆற்றல் திறன்
Halogen விளக்குகளில் மின் ஆற்றலானது ஒளி ஆற்றலாக மாற்றப்படும் போது அதில் உள்ள டங்ஸ்டன் இழைகளால் அதிக வெப்பம் உருவாகிறது. இதனால் அதிகப்படியான மின் ஆற்றல், வெப்ப ஆற்றலாக செலவாகிறது.
ஆனால் LED விளக்குகளில் சிறு சிறு டயோடு (diode) உதவியுடன் வெப்ப ஆற்றல் குறைக்கப்பட்டு, மின் ஆற்றல் முழுவதும் ஒளி ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதனால் LED விளக்குகள் ஒளிரும் விளக்குகளை விட 85% அதிகமான செயல் திறனை வழங்குகிறது.
சிறந்த ஒளிரும் தன்மை
Halogen போன்ற விளக்குகளில் உருவாகும் அதிகப்படியான பிரகாசம், எதிரில் வரும் வாகன ஓட்டுனருக்கு சில நொடிகள் பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
ஆனால் LED விளக்குகளில் உள்ள சிறுசிறு டயோட் (diode) இணைந்து உருவாகும் வெளிச்சம் சரியான அளவுடன் இருப்பதால், எதிரில் வரும் வாகன ஓட்டுனருக்கு, வெளிச்சத்தால் ஏற்படும் பார்வைக் குறைபாடு தடுக்கப்படுகிறது.
மேலும் Halogen விளக்குகள் முழு வெளிச்சத்தை அடைய சில நொடிகள் எடுத்துக்கொள்ளும். ஆனால் LED விளக்குகள் முழுவெளிச்சத்தை 0.25 வினாடிகளில் அடைந்துவிடும். இதனால் பிரேக் சிக்னல் மற்றும் பக்கவாட்டில் சிக்னலில் போது மற்ற ஓட்டுநர்கள் விரைவாக சிக்னலை பெற எல்இடி விளக்குகள் உதவுகிறது.
நீடித்த ஆயுள்
எல்இடி விளக்குகள் நீடித்த ஆயுளை கொண்டது. எல்இடி விளக்குகள் பொதுவாக 15,000 மணி நேர ஆயுளை கொண்டுள்ளது. இது வாகனத்தின் ஆயிட்காலத்திற்கு போதுமானது. ஆனால் Halogen விளக்குகள் 1,000 மணி நேர ஆயுளை கொண்டது. இதனால் Halogen விளக்குகளை அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் ஏற்படும்.
குறைவான செலவு
எல்இடி விளக்குகளின் விலை சற்று அதிகம். ஆனால் இதனுடைய ஆயுட்காலத்தை ஒப்பிடும்போது பயன்பாட்டிற்கான செலவு குறைகிறது. மேலும் குறைந்த மின்னாற்றலை பயன்படுத்துவதால் வாகன பேட்டரியின் செயல் திறனைக் கூட்டுகிறது.
குறைவான மின்சார பயன்பாடு, நீண்ட ஆயுள் இந்த LED விளக்கின் மொத்த பயன்பாட்டிற்கான விலையை குறைக்கிறது.
எனவே, மிகுந்த பயன்களை தரும் LED மின்விளக்குகளை நமது வாகனங்களில் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.