பங்கு சந்தைக்கும் தங்கத்தின் விலைக்கும் என்ன தொடர்பு ?
நமது இந்தியாவில் பெண்கள் அதிகமாக விரும்பி அணியும் பெரும்பாலான அணிகலன்கள் தங்கத்தால் ஆனவை. மேலும் தங்க நகைகளுக்கு மயங்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம்.
இந்த தங்கத்தை பெண்கள் மற்றும் இந்திய குடும்பத்தினர் பணத்தை பெருக்கும் ஒரு நல்ல முதலீடாக பார்க்கின்றனர். இந்த மதிப்பு வாய்ந்த தங்கத்திற்கும் பங்கு சந்தைக்கும் உள்ள முக்கியமான தெரிந்து கொள்ள வேண்டிய தொடர்பை கீழே காணலாம்.
பங்கு சந்தை
பங்கு சந்தை என்பது பொது மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கம்பெனியின் பங்குகளை வாங்கி, விற்கும் ஒரு இடமாகும். இந்தியாவில் தேசிய பங்கு சந்தை, பாம்பே பங்கு சந்தை என இரண்டு முக்கிய சந்தைகள் பொதுமக்களுக்காக செயல்பட்டு வருகிறது.
இதுவே அமெரிக்காவில் NYSE மற்றும் NASDAQ என இரண்டு முக்கிய பெரிய பங்கு சந்தைகள் உள்ளது. இந்த பங்கு சந்தை முதன்முதலில் நெதர்லாந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரில் 1611-ல் பொதுமக்கள் வணிகத்திற்காக தொடங்கப்பட்டது.
தற்போது, இந்த பங்கு சந்தையில் பொதுமக்கள் மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு (Investment) அல்லது வர்த்தகம் (Trading) செய்யலாம்.
மேலும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களிலும், கச்சா எண்ணெய், விவசாய பொருட்கள் மற்றும் தேசிய நாணயங்களிலும் வர்த்தகம் செய்யலாம்.
தங்கம்
தங்கத்தின் பயன்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதற்கு உதாரணமாக கி.பி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுமேரிய நாகரிகம் மற்றும் மற்றும் எகிப்து நாகரிக மக்கள் பயன்படுத்தி வந்ததை கூறலாம்.
அதன்பின்பு தங்கமானது அரசர்களுக்கு கீரிடம் செய்யவும், சிலைகளை வடிக்கவும் பயன்பட்டு வந்தது. மேலும் தங்கத்தால் ஆன நாணயங்களை பல்வேறு நாட்டு மன்னர்களும், மக்களும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தினர். எனவே தங்கமானது இன்றளவும் மக்களால் மதிப்புமிக்க பொருளாக பார்க்கப்படுகிறது.
தற்போது பொது மக்கள் தங்கத்தை அணிகலன்களாகவும், முதலீடு செய்யும் பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மஞ்சள் உலோகம் என அழைக்கப்படும இந்த தங்கம், அதன் தரத்திற்கு ஏற்ப 22 கேரட் மற்றும் 24 கேரட் என அளவிடப்படுகிறது.
பங்கு சந்தைக்கும் தங்கத்தின் விலைக்கான தொடர்பு
பொருளாதார உயர்வுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் போது பங்கு சந்தையில் உள்ள பங்குகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ச்சி அடையும். இதனால் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்று நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வார்கள்.
இதனால் தங்கத்தின் தேவை குறைவதால் விலையும் குறைகிறது. மேலும் நிறுவன பங்குகளின் தேவை அதிகரிப்பால் விலை உயர்கிறது.
இதுவே போர், கொடிய நோய் போன்ற ஆபத்து காலங்களில் பொருளாதார மந்த நிலை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி தடைபடுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை பாதுகாக்க, நிறுவன பங்குகளை விற்றுவிட்டு தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
இதனால் நிறுவன பங்குகளின் தேவை குறைவதால் பங்குகளின் விலை குறையும். மேலும் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயர்கிறது.
மீண்டும் பொருளாதாரத்திற்கு சாதகமான சூழ்நிலை வரும் போது தங்கத்தின் தேவை குறைந்து விலை குறைகிறது அல்லது விலை நிலையாக சிறிது மாற்றத்துடன் வர்த்தகம் ஆகிறது.
இவ்வாறு பங்கு சந்தையின் உயர்வும், தங்கத்தின் விலையும் எதிராக செயல்படுகிறது.