சொர்க்கத்தில் நரி – தமிழ் கதைகள்
சுந்தரபுரி என்ற காட்டில் தந்திரமான ஒரு நரி வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த நரி கிணற்றில் தவறி விழுந்து விட்டது. விழுந்த அந்த நரி யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் என காத்திருந்தது.
ஒருவரும் அந்தப்பக்கம் வரவே இல்லை. அதனால் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் தண்ணீருக்கு உள்ளேயே தவித்துக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் அந்தப் பக்கம் ஒரு ஆடு “மே மே” என கத்திக் கொண்டே வந்தது. உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.
“ஆடு அண்ணே, இங்க வாயேன்” என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும் ஆடு எட்டிப்பார்த்தது.
“என்ன நரியாரே! தவறி விழுந்து விட்டாயா?” என்று கேட்டது ஆடு. “சே… சே… நானாவது விழுவதாவது, நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். இங்கே கோழி மீன் என சுவைமிக்க சாப்பாடு எல்லாம் தராங்க. நீ வேணும்னா இறங்கி வந்தால் உனக்கு கரும்பு, சுவைமிக்க புல், கேரட் எல்லாம் தருவாங்க”. என்றது நரி.
ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. உடனே கிணற்றுக்குள் குதித்தது.
Read Also : சூரியனும் புள்ளிமான்களும்
பின்பு ஆடு, “நரியாரே! எனக்கு எப்போது சுவைமிக்க புல், கேரட்டை தருவார்கள்?” என்று கேட்டது. அதற்கு நரி “சற்று பொறுமையாக இரு. நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்கு போகிறேன்.” என்று சொல்லிக் கொண்டு ஆட்டின் மேலேறி தாவி குதித்து தப்பி ஓடியது.
சிறிது நேரத்தில் தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.
கதையின் நீதி:
இந்த கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டோம் என்றால் “ஒரு செயலை செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும்”.