எந்த எஞ்சின் சிறந்தது ? 3 சிலிண்டர் என்ஜினா? அல்லது 4 சிலிண்டர் என்ஜினா?
நாம் அதிகம் பயன்படுத்தும் மோட்டார் பைக்கில் ஒரு சிலிண்டர் உள்ள எஞ்சின் தான் இருக்கும். ஒரு சிலிண்டர் எஞ்சினில் கிடைக்கும் சக்தி மோட்டார் பைக்கிற்கு போதுமானது.
ஆனால் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான சக்தியை அளிக்க, 3 அல்லது 4 சிலிண்டர் இன்ஜின் தேவைப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்களில் பயணிகள் போக்குவரத்திற்காகவும், சிறிய கனரக வாகனங்களில் எடையை சுமக்கவும், இந்த 3 அல்லது 4 சிலிண்டர் எஞ்சின்களில் இருந்து கிடைக்கும் சக்தி போதுமானது.
எனவே வாகன தயாரிப்பாளர்கள் தங்களுடைய நான்கு சக்கர கார் மற்றும் சிறிய கனரக வாகனங்களில், 3 அல்லது 4 சிலிண்டர் எஞ்சினை பொருத்தி விற்பனை செய்கிறார்கள். இந்த மூன்று அல்லது நான்கு சிலிண்டர் என்ஜின்களில் எந்த என்ஜின் சிறந்தது என்பதை பற்றி இந்த உள்ள பதிவில் பார்க்கலாம்.
பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின்
தற்போது உள்ள பெரும்பாலான எஞ்சின்களில் சக்தியை உருவாக்க நான்கு நிலைகள் (4 stroke) உள்ளது. எனவே இந்த எஞ்சின்களை 4 stroke engine என்றும் சொல்கிறார்கள். இந்த என்ஜின்கள் பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாக பயன்படுத்துகிறது.
இந்த என்ஜின்களில் சக்தியை உருவாக்க, காற்று மற்றும் எரிபொருள் உள்ளிழுப்பு, அழுத்தம், வெடிப்பு மற்றும் காற்று வெளியேற்றம் என நான்கு நிலைகள் தேவைப்படுகிறது.
இந்த நான்கு நிலைகளிலும் என்ஜின் சிலிண்டரில் உள்ள பிஸ்டன், மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கிய இயக்கத்தை கொண்டிருக்கும். அதாவது காற்று மற்றும் எரிபொருள் உள்ளிழுப்பு நிலையில் என்ஜின் சிலிண்டரில் உள்ள பிஸ்டன் கீழ் நோக்கி செல்லும்.
அடுத்த இரண்டாவது நிலையில் பிஸ்டன் மேல் நோக்கி சென்று காற்று மற்றும் எரிபொருளை மூடப்பட்ட என்ஜின் சிலிண்டரில் அழுத்தும். இதனால் மூன்றாவது நிலையில் அதிக அழுத்தத்தால் வெடிப்பு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் தான் அதிக சக்தியானது சிலிண்டரில் உள்ள பிஸ்டனுக்கு கிடைக்கிறது. அடுத்த நான்காவது நிலையில் பிஸ்டன் மேல் நோக்கி சென்று எரிந்த காற்றை வெளியேற்றுகிறது.
இவ்வாறு மூன்றாவது நிலையில் ஏற்படும் அதிக சக்தி, பிஸ்டனை மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கிய இயக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பிஸ்டனின் மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கிய இயக்கம், Connecting rod மற்றும் crank shaft உதவியுடன் சுழற்சி இயக்கமாக மாற்றப்படுகிறது. இந்த சமயத்தில் அதிக அதிர்வுகள் என்ஜினில் ஏற்படுகிறது.
அடுத்ததாக crank shaft-க்கு கிடைத்த அதிக சக்தி, சுழற்சி இயக்கம் மற்றும் அதிர்வுகள் அப்படியே flywheel-க்கு செல்கிறது. மேலும் சக்தியானது clutch, gearbox வழியாக சக்கரத்திற்கு செல்கிறது.
மேலே சொல்லப்பட்ட செயல்முறை ஒரு சிலிண்டர் எஞ்சினின் இயக்க முறையாகும். இவ்வாறு சக்தியை உருவாக்க உதவும் எஞ்சினில், 4 சிலிண்டர் அமைப்பு சிறந்ததா என கீழே காணலாம்.
4 சிலிண்டர் அமைப்பு
இந்த அமைப்பில் 4 சிலிண்டர், 4 பிஸ்டன் மற்றும் 4 Connecting rod பாகங்கள் வரிசையாக இருக்கும். மேலே சொன்னவாறு எஞ்சினின் மூன்றாவது நிலையில் தான் அதிக சக்தியும், அதிக அதிர்வும் கிடைக்கிறது. மற்ற நிலைகளில் சக்தியும், அதிர்வும் கிடைப்பதில்லை.
எஞ்சினில் இருந்து சுழற்சி கிடைப்பதால் உங்களுக்கு புரியும்படி வட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒரு சிலிண்டர் அமைப்பில் வட்டத்தின் மூன்றாவது கால் பகுதியில் தான் வெடிப்பு ஏற்படுகிறது. இதுவே 4 சிலிண்டர் அமைப்பில் வட்டத்தின் ஒவ்வொரு கால் பகுதியிலும் வெடிப்பு ஏற்படுகிறது.
இதனால் நான்கு கால் பகுதியிலும் சமன் செய்யப்பட்ட அதிக சக்தியும், அதிக அதிர்வும் கிடைக்கிறது. இது அப்படியே flywheel வழியாக கிளட்ச்க்கு செல்கிறது. இங்கு சமன் செய்யப்பட்ட அதிக அதிர்வை கிளட்ச் அமைப்பிலுள்ள உராய்வுகள் தட்டுகள் எளிமையாக குறைத்துவிடுகிறது.
இவ்வாறு மிகவும் குறைக்கப்பட்ட அதிர்வுடன் சக்தியானது, அப்படியே gear box வழியாக சக்கரத்திற்கு செல்கிறது. இதனால் மிகவும் குறைவான அதிர்வுடன், பயணிகள் சவுகரியத்துடன் பயணிக்க 4 சிலிண்டர் அமைப்பு உதவுகிறது.
3 சிலிண்டர் அமைப்பு
இந்த அமைப்பில் 3 சிலிண்டர், 3 பிஸ்டன் மற்றும் 3 Connecting rod பாகங்கள் வரிசையாக இருக்கும். இங்கு வட்டத்தின் மூன்று கால் பகுதியில் மட்டுமே அதிக சக்தியும் அதிக அதிர்வும் உருவாகிறது. நான்காவது கால் பகுதியில் சக்தியும், அதிர்வும் உருவாகுவதில்லை.
எனவே இந்த சமன் செய்யப்படாத அதிக சக்தி மற்றும் அதிர்வுகள் flywheel வழியாக கிளட்ச் அமைப்புக்கு செல்கிறது. இந்த சிக்கலான சமன் செய்யப்படாத அதிக அதிர்வுகள் கிளட்ச் அமைப்பில் உள்ள உராய்வு தட்டினால், அதிக அளவில் வடி கட்ட முடிவதில்லை.
இவ்வாறு அதிர்வுகள் பெரும்பான்மையாக குறைக்கப்படாமல் gearbox வழியாக சக்கரத்திற்கு செல்கிறது. இந்த அதிர்வுகள், வாகனத்தில் நீண்ட தூரம் பயணிப்பவர்களை எளிதில் சோர்வடைய செய்கிறது.
மேலும் வாகனம் வாங்கி இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு பின்பு, தேய்மானத்தின் காரணமாக, 3 சிலிண்டர் அமைப்பில் ஏற்படும் அதிக அதிர்வுகள் gearbox அமைப்பை எளிதாக சேதமடைய செய்யும்.
எனவே பயணிகளுக்கு சிறந்த comfort-ஐ கொடுக்க மற்றும் gearbox அமைப்பை சேதம் அடையாமல் பாதுகாக்க, 4 சிலிண்டர் எஞ்சின் அமைப்பே சிறந்தது.