பூதம் கேட்ட கேள்வி – தமிழ் சிறுகதைகள்
முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ராமு என்கின்ற விவசாயி தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். ராமுக்கு சிறியதாக ஒரு விவசாய நிலம் இருந்தது.
அந்த சிறிய நிலத்தில் விவசாயம் செய்து தன்னுடைய வாழ்க்கையை ஓட்டி வந்தான். தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவி செய்யும் ராமு, புத்திசாலியும் கூட.
ஒரு வருடம் சரியாக மழை பெய்யாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த ராமு, பக்கத்தில் இருக்கிற பட்டணத்துக்கு போய் கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்தான்.
அடுத்த நாள் காலையில் வீட்டிலிருந்து பட்டணத்திற்கு புறப்பட்டுப் போனான். அந்தப் பட்டணத்திற்கு ஒரு அடர்ந்த காடு வழியாகத்தான் போக வேண்டும்.
ரொம்ப நேரம் நடந்ததால் சிறிது நேரம் ஓய்வு எடுக்க ஒரு மரத்துக்கு அடியில் படுத்து தூங்கினான். தூக்கம் கலைந்து விழித்தபோது மரத்தின் கிளையில் பூதம் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ராமுவுக்கு மிகவும் பயமாக இருந்தது. “ பூதம்! பூதம்! “ என்று அலறினான்.
அப்போது பூதம் “தம்பி பயப்படாதே! இப்போது நான் உன்னை கொல்ல மாட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் கேட்கும் விடுகதைக்கு சரியான பதிலை சொல்லி விட்டால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறேன். மீறி தவறாக சொன்னால் உன்னை கொன்று விடுவேன்” என்றது.
“விடுகதையா?” என்று கேட்டான் ராமு.
“ஆம். விடுகதை தான். நான் நான்கு விடுகதை கேட்பேன். நான்கில் மூன்று விடுகதைக்கு மட்டும் சரியான பதிலை சொன்னால் போதும், உன்னை உயிரோடு விட்டு விடுகிறேன்.” என்று சொன்னது பூதம்.
சிறிது நேரம் யோசித்த ராமு, பூதத்திடம் இருந்து தப்ப விடுகதைக்கு ஒப்புக்கொண்டான்.
Read Also : சூரியனும் புள்ளிமான்களும்
பூதம் முதல் விடுகதையாக “பூ பூக்கும், காய் காய்க்கும், ஆனால் பழம் பழுக்காது அது என்ன?” என்று கேட்டது. ராமு விவசாயியாக இருந்ததால் உடனே “தேங்காய்” என்று சொன்னான்.
சரியான பதிலை சொன்னதால், பூதம் இரண்டாவது விடுகதையாக “உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு. அவன் யார்?” என்று கேட்டது. சிறிது யோசனைக்குப்பின் “ஜன்னல்” என்று சொன்னான்.
உடனே பூதம், “தவறான பதிலை சொல்லி விட்டாய். இன்னும் இரண்டு கேள்விக்கு கண்டிப்பாக சரியான பதிலை சொல்ல வேண்டும். இல்லை என்றால் உன்னை கொன்று விடுவேன்.” என்றது.
பின்பு மூன்றாவது விடுகதையாக, “உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்க தெரியாது. அது என்ன? “என்று பூதம் கேட்டது. ராமு “சீப்பு” என்று சொன்னான்.
சரியான பதிலை சொன்னதால் கடைசி விடுகதையாக, “படபடக்கும். பளபளக்கும்.மனதுக்குள் இடம் பிடிக்கும். அது என்ன?” என்று கேட்டது.
ராமு சிறிது நேரம் யோசித்தான். பதில் கிடைக்கவில்லை. நெஞ்சம் படபடத்தது. மனதுக்குள் பயம் தொற்றிக்கொண்டது.
“ ம். சீக்கிரம் சொல்.” என்று பூதம் கத்தியது. அந்த சமயம் ராமுவுக்கு தீப்பொறியாக பதில் கிடைத்தது. சட்டென்று “பட்டாசு” என்று பதில் சொன்னான்.
“சரியான பதிலை சொன்னதால் உன்னை உயிரோடு விட்டுவிடுகிறேன். உன்னுடைய அறிவை பாராட்டி தங்கம் நிறைந்த பெட்டியை பரிசாக கொடுக்கிறேன்.” என சொன்னவாறு பூதம் ராமுவுக்கு பரிசைக் கொடுத்தது. தங்கம் நிறைந்த பெட்டியை வாங்கிக் கொண்ட ராமு சந்தோசமாக வீட்டை நோக்கி நடந்தான்.
கதையின் நீதி:
இந்த கதையின் நீதி என்னவென்றால், புத்திசாலியாக இருந்தோம் என்றால் நமக்கு நிறைய செல்வங்கள் கிடைக்கும்.