210 km Range – Hero Nyx-Hx எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
இந்தியாவில் சிறு குறு வியாபாரிகளுக்கு வணிகப் பொருட்களை சுமந்து செல்ல மிகவும் உதவியாக இருப்பது TVS XL வண்டி தான். இந்த TVS XL வண்டியின் பின்புறத்தில் உள்ள சவுகரியமான இடவசதி, வணிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இலகுவாக எடுத்துச் செல்ல உதவுகிறது.
அந்தவகையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் வணிக பயன்பாட்டிற்காக சிறு வியாபாரிகள் பயன்படுத்தும் வகையில் Hero NYX-Hx என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வணிகப் பொருட்களை சுமந்து செல்லவும், அதிக தூரம் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Hero NYX-Hx எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை கீழே பார்க்கலாம்.
Hero NYX-Hx எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
வணிகப் பொருட்களை சுமந்து செல்லும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த Hero NYX-Hx ஸ்கூட்டரில் 600 Watt திறனுடைய மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டாருக்கு சக்தியானது 1.53 Kwh திறனுடைய லித்தியம் அயன் பேட்டரி மூலம் கிடைக்கிறது.
எளிமையான வடிவமைப்பு உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், குறைவான மின் சக்தியில் அதிக இழுவிசையை பெறும் வகையில், பரிமாற்றும் அமைப்பு (Transmission System) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 42 Kmph ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முழு சார்ஜுக்கு 82 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும். மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரியை பரிமாறிக்கொள்ளும் வசதியுடன் 210 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என்று ஹீரோ தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
இந்த ஸ்கூட்டரில் சிறந்த காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (Combi Braking System) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் உள்ள மின் மோட்டார் அமைப்பு, அதிர்வுகள் இல்லாத மென்மையான பயண அனுபவத்தை பெற உதவுகிறது.
தொழில்நுட்பம்
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தனித்தனி இருக்கை அமைப்பு உள்ளது. இது வணிக பயன்பாட்டிற்காக பின் இருக்கை அமைப்பை மடித்துக் கொள்ளவும் அல்லது முதுகு தாங்கியாகவும் (Back Rest) என பலவகைகளில் பயன்படுகிறது.
மேலும் முன்பகுதியில் (Foot rest) உள்ள இடவசதியும் வணிக பொருட்களை வைப்பதற்கு உதவுகிறது.
வணிக பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்தியா முழுவதும் பரவியுள்ள 500க்கும் அதிகமான சேவை மையத்தின் வழியாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் கூடுதலான பேட்டரியை பெறும் வசதியை ஹீரோ நிறுவனம் வழங்குகிறது.
மேலும் குறைவான இயக்க செலவு, அதிக சுமக்கும் திறன், அதிக தூரம் பயணம் மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களை இந்த Hero NYX-Hx எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்குகிறது.
பெட்ரோல் ஸ்கூட்டர்க்கு பதிலாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதன் வழியாக வணிகர்கள், பயணத்திற்காக ஏற்படும் செலவில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க வழி செய்கிறது.
Hero NYX-Hx ஸ்கூட்டரின் விலை
இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வணிக பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் FAME-II திட்டத்தின் வழியாக 64,640 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தனிநபர் பயன்பாட்டிற்காக 1.09 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.